கல்வி நிர்வாகங்கள் கூறும் சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிய வேண்டும் - கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் கல்வி நிர்வாகங்கள் கூறும் சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பள்ளிக்கூட நேரத்தில் தொழுகை
கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே பாலேசங்கப்பா அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான முஸ்லிம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் தொழுகை நடத்த வசதியாக பள்ளி வளாகத்திலேயே ஒரு அறையை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உமாதேவி ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் அவர் அவர்கள் பள்ளி நேரத்திலேயே தொழுகை நடத்த அனுமதித்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து கல்வித்துறை, தலைமை ஆசிரியை உமாதேவியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகம் முழுவதும் பரபரப்பு
இந்த நிலையில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அந்த கல்லூரி முதல்வர், மாணவ-மாணவிகள் சீருடையை தவிர பிற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை மீறி முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர், கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை.
அவர்கள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரம் கர்நாடகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு வருகிற 8-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
போட்டி பேரணி
இந்த நிலையில் உடுப்பி மாவட்டத்தில் தொடர்ந்து முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்தனர். அவர்களுக்கு போட்டியாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு பேரணியாக வந்தனர். இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனால் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுப்பி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீருடை கட்டாயம்
இந்த நிலையில் இதுதொடர்பாக கர்நாடக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ‘‘கர்நாடகத்தில் அரசின் பி.யூ.கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்யும் சீருடையை மாணவர்கள் அணிந்து வருவது கட்டாயம். ஒருவேளை சீருடை அணிவது கட்டாயமல்ல என்று நிர்வாகம் கூறினால், அங்கு சமத்துவம், ஒருமைப்பாட்டை காத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் இருக்கும் ஆடைகளை மாணவர்கள் அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது. தனியார் பி.யூ.கல்லூரிகளில் அதன் நிர்வாகங்கள் முடிவு செய்யும் சீருடையை அணிய வேண்டும்’’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story