சேலத்தில் பரபரப்பு: திராவிடர் விடுதலை கழகத்தினர் ரெயில் மறியல் செய்ய முயற்சி
சேலத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ரெயில் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்,
நீட் தேர்வு விலக்கு
நீட் தேர்வு விலக்கு மசோதா கிராமப்புறம் மற்றும் ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி அதை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு அவரை திரும்ப பெற வலியுறுத்தியும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், திராவிடர் விடுதலை கழக மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெயில் மறியல் முயற்சி
அப்போது திடீரென திராவிடர் விடுதலை கழகத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், சுப்புலட்சுமி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஒரு பெண் உள்பட 61 திராவிடர் விடுதலை கழகத்தினரை கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திராவிடர் விடுதலை கழகத்தினரின் இந்த திடீர் ரெயில் மறியல் முயற்சி காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story