பெரம்பலூர் நகராட்சியில் பா.ம.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி
பெரம்பலூர் நகராட்சியில் பா.ம.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
வேட்பு மனு தள்ளுபடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூா் நகராட்சியில் 21 வார்டுகளில் போட்டியிட 126 பேரும், தலா 15 வார்டுகளை கொண்டுள்ள குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட 235 பேரும் என மொத்தம் 361 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் முன்னிலையில் நடந்தது.
இதில் பெரம்பலூர் நகராட்சியில் 6-வது வார்டில் போட்டியிட பா.ம.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த விமல்குமாரின் வேட்பு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவாக இருந்ததால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பேரூராட்சிகளில்...
இதைத்தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளின் தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் என அனைவரின் வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 126 வேட்பு மனுக்களில், 125 வேட்பு மனுக்களும், பேரூராட்சிகளில் குரும்பலூரில் தாக்கல் செய்த 54 பேரின் வேட்பு மனுக்களும், அரும்பாவூரில் தாக்கல் செய்த 48 பேரின் வேட்பு மனுக்களும், பூலாம்பாடியில் தாக்கல் செய்த 36 பேரின் வேட்பு மனுக்களும், லெப்பைக்குடிகாட்டில் தாக்கல் செய்த 97 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். மேலும் நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதியும் நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story