இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 6 Feb 2022 7:10 PM IST (Updated: 6 Feb 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள், பல்லடம், காங்கேயம் நகராட்சியில் தலா 18 வார்டுகள், வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள், உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகளில் தேர்தல் வருகிற 19ந்தேதி நடக்கிறது.
இதுபோல் 15 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 440 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுபோல் நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட மொத்தம் 2,493 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னமும், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு பொதுவான சின்னமும் வழங்கப்படும். சுயேச்சைகளுக்கு 30 சின்னங்கள் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 சின்னத்தை ஒரு வேட்பாளர் கேட்கலாம். அதில் முதலாவது சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு பிரசாரப்பணிகள் தீவிரம் அடையும்.

Next Story