வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்ததாக புகார்: கணவன், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்ததாக கணவன், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் வெங்கத்தூர் கண்டிகை சேர்ந்த ஜெயந்தி (28) என்பவரை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நிரஞ்சனா (வயது 7) சாதனா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே மணிவண்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி அடித்து கொடுமை செய்து வந்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவண்ணன் தனது தாயார் சசிகலா, தந்தை ஏகாம்பரம், மற்றும் உறவினர்கள் செல்வி, செந்தில்குமார், சின்னப்பொண்ணு, சரளா ஆகியோருடன் சேர்ந்து ஜெயந்தியை கூடுதல் வரதட்சணை பெற்றவர வேண்டும் என தகாத வார்த்தைகள் பேசி அவரை வீட்டை விட்டு வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ஜெயந்தியின் கணவர் மணிவண்ணன், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story