மேகமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


மேகமலையில்  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 7:43 PM IST (Updated: 6 Feb 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

மேகமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள சிறு சிறு ஓடைகள் ஒன்றிணைந்து மூலவைகை ஆறாக ஓடுகிறது. இங்கு புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இந்த வனப்பகுதி கடந்த ஆண்டு புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. 
அதன்பின்னர் மேகமலை, கண்டமனூர், வருசநாடு வனத்துறையினர் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வனப்பகுதியை பாதுகாத்து வருகின்றனர். பொதுவாக வெயில் காலங்களில் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் வறண்ட பிறகு யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீருக்காக அருகே அமைந்துள்ள கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் மேகமலை வனப்பகுதி செழிப்பாக காணப்படுகிறது. எனவே யானை, காட்டெருமை, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயராமல் கடந்த 2 ஆண்டுகளாக மேகமலை வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. இதனால் தற்போது யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதேபோல அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும் கருமந்தி மேகமலையில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மலைக்கிராம மக்களிடம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பது பற்றி வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story