தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Feb 2022 8:59 PM IST (Updated: 6 Feb 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான  மேல்நிலை குடிநீா் தொட்டி 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்  தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொட்டி அருகில் கோவில், பள்ளிக்கூடம், ஊராட்சி கட்டிடம், நியாய விலைக்கடை மற்றும் அங்கன்வாடி (குழந்தைகள்) கட்டிடம் ஆகியவை உள்ளன. இந்த தொட்டி அருகே செல்பவர்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான மேல்நிலை  குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய  மேல்நிலை குடிநீா் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இளவரசன், ஒளிமதி கிராமம்.
குளம் சுத்தம் செய்யப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சிறைச்சாலை அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த  குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. தற்போது தண்ணீர் சுத்தம் இன்றி பிளாஸ்டிக் கழிவுகளும், பாசி படர்ந்தும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குளக்கரையை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் சிறுவர், சிறுமிகள் தவறி விழும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
முகிலன், மயிலாடுதுறை மாவட்டம்.
புதிய கட்டிடம் வேண்டும்
சீர்காழி வட்டம், சட்டநாதபுரம் கூட்டுறவு உணவுப்பொருள் அங்காடியில்  பொருட்களை இருப்பு வைக்க போதுமான கட்டிட வசதியும், பாதுகாப்பும் இல்லை. குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவதற்கு போதிய  இடவசதி இல்லாததால் அவதிப்படுகிறார்கள். ஊழியரும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். மேலும் கூடுதல் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், சீர்காழி.




Next Story