கடலூர் மாநகராட்சியில் 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை


கடலூர் மாநகராட்சியில் 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை
x
தினத்தந்தி 6 Feb 2022 10:23 PM IST (Updated: 6 Feb 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாநகராட்சியில் 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. இவற்றில் கண்காணிப்பு பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடலூர், 

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 352 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 2 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் 350 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். இதன் மூலம் மொத்தம் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் எது என்று இன்று மாலை 3 மணிக்கு மேல் தெரிந்து விடும்.

மிகவும் பதற்றமானவை

இதைத்தொடர்ந்து இந்த தேர்தலுக்காக 152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 25 வாக்‌குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15-வது வார்டு தேவனாம்பட்டினம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள், 16-வது வார்டில் பெரியார் அரசு கல்லூரியில் 2 வாக்குச்சாவடிகள், 25-வது வார்டு தங்கராஜ்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி, 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, 34-வது வார்டு சிவானந்தபுரம் காமாட்சி சண்முகம் மெட்ரிக்பள்ளி, வண்டிப்பாளையம் மாநகராட்சி சமுதாய கூடம், 45-வது வார்டு கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 2 வாக்குச்சாவடி மையங்கள் என 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை.

இந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது.இதில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாக்குச்சாவடி எண், சாய்வு தளம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story