9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி


9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 6 Feb 2022 10:24 PM IST (Updated: 6 Feb 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை 9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நாகையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வெளிப்பாளையம்:
தமிழகத்தில் இதுவரை 9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது  என நாகையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வு
நாகையை அடுத்த ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை முதன்மை  செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்காக அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணீஸ்குமார் என்ற மாணவருக்கு அனுமதி கடிதத்தை வழங்கினார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் போது பயம் காரணமாக மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். நோய் தொற்று குறைந்த பிறகு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதில்லை. வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை. 
 தடுப்பூசி
ஒவ்வொரு நாளும், வாரந்தோறும் முகாம் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 67 லட்சம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 34 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணையாக 5 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5 கோடியே 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசியை ஒரு கோடி பேர் செலுத்தவில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. 2 வாரத்திற்கு பிறகுதான் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
பூஸ்டர் தடுப்பூசி 34 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகளை போட மக்கள் தானாக முன்வரவேண்டும்.  நாகை மாவட்டத்தில் முதல் தவணையாக 84 சதவீதமும், இரண்டாம் தவணையாக 75 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி மாநில சராசரியை விட அதிக அளவு தடுப்பூசியை செலுத்திய மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக 60 லட்சம் பேருக்கு ரூ.110 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
கவனக்குறைவு
நோய் வராமல் தடுக்க பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்த வேண்டும். நோய் தொற்று குறைந்து வருவதால் சிலர் கவனக்குறைவாக உள்ளனர். அவ்வாறு இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது கலெக்டர் அருண்தம்புராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story