‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Feb 2022 11:49 PM IST (Updated: 6 Feb 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சட்டவிரோதமாக மது விற்பனை
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை போலீசார் கண்டும், காணாமலும் சென்று விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, பெரம்பலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, கரூர்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரிலிருந்து கவுண்டன்புதூர் செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா, கரூர்.
காட்சி முனையை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து சோபனபுரம் வழியாக பச்சைமலை-செங்காட்டுப்பட்டி செல்லும்போது அங்கு திறந்த வெளியில் இயற்கையை ரசிக்க காட்சி முனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள இரும்பு தூண்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு குழாய்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காட்சி முனையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு குழாய்கள் மற்றும் கம்பிகளை சரி செய்ய வேண்டும்.
ரதி, திருச்சி.
சுகாதார சீர்கேடு
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் இருந்து கோட்டை ஸ்டேஷன் ரோடு, பழைய குட்செட் ரோடு, அம்பேத்கர் நகர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழன், திருச்சி.
திருச்சி மாவட்டம் உய்ய கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவு நீரை கலப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், திருச்சி.

Next Story