டாஸ்மாக் பார் ஊழியர் கொலை வழக்கில் 6 பேர் கைது


டாஸ்மாக் பார் ஊழியர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2022 12:47 AM IST (Updated: 7 Feb 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காளையார்கோவில், 

காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் பார் ஊழியர் கொலை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடி உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலை எதிரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழியத்திரும்பல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது 35) என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
கொலையான சண்முகம் கோவையில் ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்து உள்ளார். ஊருக்கு வந்த இடத்தில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலை சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

6 பேர் கைது

இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (24), மறவமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார் (24), மற்றும் 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், 16 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 6 பேரும் சேர்ந்து முன்விரோதத்தில் சண்முகத்தை கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக அந்த 6 பேரையும் காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

Next Story