குமரி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் ஞாயிறு முழு ஊரடங்கால் நேற்று குமரி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.
களியக்காவிளை:
கேரளாவில் ஞாயிறு முழு ஊரடங்கால் நேற்று குமரி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.
ஞாயிறு முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மருந்து சம்பந்தப்பட்ட கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.
மருத்துவம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வாகனங்கள் இயக்கப்பட்டன. மேலும் ஆஸ்பத்திரிக்கு செல்கிறவர்கள், அரசு ஊழியர்கள் நலன் கருதி அவ்வப்போது அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.
முழு ஊரடங்கையொட்டி தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த பஸ்களும் எல்லையோடு நிறுத்தப்பட்டன. அதே சமயத்தில் கேரள பகுதியான பாறசாலை வழியாக பனச்சமூடு போன்ற தமிழக பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் இருமாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக போலீசார் கேரள செல்லும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே செல்ல அறிவுரை கூறினர். இதுபோல், கேரள போலீசார் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே பயணத்திற்கு அனுமதித்தனர். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்பட்டது. களியக்காவிளை அருகே இஞ்சிவிளை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story