தக்காளி விலை வீழ்ச்சி
சேலத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:-
சேலத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் தக்காளி விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாம்பார் மற்றும் உணவுகளில் தக்காளி இடம்பெறுவது மிகவும் அரிதாக இருந்தது.
சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளிலும் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. உள்ளூரில் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டதால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
விளைச்சல் அதிகரிப்பு
இதனிடையே, மழை நின்றுபோனதால் தக்காளி விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, நங்கவள்ளி, கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இருந்தும், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மாநகரத்திற்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக சேலத்தில் உள்ள சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் அதன்விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதர காய்கறிகள்
சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கலுக்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகரித்து இருந்தாலும் தற்போது அவற்றின் விலை வெகுவாக குறைந்துள்ளது. தக்காளியை போல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்படுகிறது.
இதனால் சந்தைகளுக்கு வந்த பொதுமக்கள் அதிகளவில் தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20 முதல் 30-க்கும், வெண்டைக்காய் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.30-க்கும், கேரட் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story