தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாமதமாகும் சாலை பணி
தர்மபுரி- பென்னாகரம் மெயின் ரோட்டில் இருந்து டி.என்.வி நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று இருந்தது. நகராட்சி சார்பில் அங்கு புதிய தார்சாலை அமைக்க பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் தாமதமாக நடப்பதால் அந்த நகருக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, சத்யா நகர், தர்மபுரி.
ஏ.டி.எம். மையங்கள் செயல்படுமா?
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் உள்ளது. பணம் எடுக்க செல்லும் போது ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களாக அலைய வேண்டிய உள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் காட்சி பொருளாகவே உள்ளன. இதுதொடர்பாக அந்தந்த வங்கிகளில் கேட்டால் சர்வர் பிரச்சினை என்று கூறுகிறார்கள். எனவே இந்த ஏ.டி.எம். மையங்கள் நல்ல முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபாலன், கிருஷ்ணகிரி.
அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா ஏலகிரி மேல் வீதி மற்றும் கீழ்வீதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதுபற்றி புகார் அளித்தால் அரைகுறையாக குடிநீர் குழாயை சரிசெய்துவிட்டு செல்கிறார்கள். இதனால் மீண்டும் மீண்டும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடையாதபடி சரி செய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும்.
-ஜோசப் அய்யப்பன், ஏலகிரி, தர்மபுரி.
தினமும் குப்பை வண்டி வருமா?
நாமக்கல் கலைவாணர் நகர் கருப்பனார் கோவில் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சேரும் குப்பைகளை எடுத்து செல்லும் குப்பை வண்டி வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே வருகிறது. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் தினமும் குப்பை வண்டி வந்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், கலைவாணர் நகர், நாமக்கல்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் நர்மதை தெரு, நெடுஞ்சாலை நகர் பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-நர்மதை தெரு மக்கள், சேலம்.
மதுபிரியர்கள் தொல்லை
சேலம் தெற்கு மணியனூர் பகுதியில் மது அருந்திவிட்டு மதிப்பிரியர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் நலன் கருதி போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் ரோந்து செல்ல வேண்டும்.
-ஊர்மக்கள், மணியனூர், சேலம்
மின்விளக்கு எரியவில்லை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிழக்கு சாணார்தெருவில் எஸ்.வளைவில் மின்கம்பத்தில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்குள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சரிசெய்து எரியச் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
பஸ்கள் நின்று செல்லுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் இருமத்தூரில் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோரும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் நிழற்குடை இல்லை மேலும் அரசு பஸ்கள் அங்கு நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இருபுறமும் நிழற்குடை அமைத்து அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஓசூர்.
Related Tags :
Next Story