நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது
நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
விருதுநகர்,
நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
சமூக நீதிக்கான முதல் அடிச்சுவட்டை எடுத்து வைத்தது பட்டிவீரன்பட்டியும், விருதுநகரும் தான். சமூக நீதிக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் போராடினர்.
சமூக நீதிக்காக பாடுபட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு தான். இதனால் தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கி.வீரமணி சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை வழங்கினார். சமூக நீதிக்கு புறம்பான சோனியா காந்திக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு எங்களையும் அழைத்தால் எப்படி கலந்து கொள்ள முடியும்.
தி.மு.க. 5 ஆண்டுகாலம் பா.ஜ.க.வுடன் ஆட்சி அமைக்கின்ற போது பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என்று தெரியவில்லை. நீட் தேர்வை பொருத்தமட்டில் தி.மு.க., காங்கிரஸ் இணைந்து ஆட்சி செய்த காலத்தில் அப்போது சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த காந்திசெல்வன் நீட் தேர்வுக்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்.
மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடடை தந்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான்.
மேம்பாலம்
நீட் தேர்வுக்கு முன்பு தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு அரசு பயிற்சி அளித்ததால் பல மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு இந்த பயிற்சி வகுப்பினை முடக்கி விட்டது. தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 541 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் நீட் தேர்வு பிரச்சினையில் தி.மு.க. அரசு தமிழக மக்களை ஏமாற்றிவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்வகையில் மருத்துவக்கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை12.5 சதவீதமாக உயர்த்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவின்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டவுடனேயே 24 மணி நேரத்தில் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து தந்தார். அதனைக் கொண்டே நகரில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அப்போது நான் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதிலும் அதையெல்லாம் தகர்த்து விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
எதிர்ப்பு அலை
தமிழகத்தில் பொங்கல் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதை தொடர்ந்து தமிழக மக்களிடையே தி.மு.க.விற்கு எதிரான எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது.
எனவே நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story