விழுப்புரம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்போகும் பெண் தலைவர் யார்?


விழுப்புரம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்போகும் பெண் தலைவர் யார்?
x

விழுப்புரம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்போகும் பெண் தலைவர் யார்? என்பது கேள்விகுறியாக உள்ளது.

விழுப்புரம்.

விழுப்புரம் நகராட்சி 1.10.1919-ம் ஆண்டில் உருவானது. பின்னர் 1.10.1953 முதல் 2-ம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்நிலை நகராட்சியாக 1.4.1973 முதல் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் நகரின் வளர்ச்சியை பொறுத்து தேர்வுநிலை நகராட்சியாக 2.3.1988 முதல் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி 33.11 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன.
ரெயில் நிலையம்
. இந்நகராட்சியானது விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கும், நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். அதுமட்டுமின்றி திருச்சி- சென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண்-45 மற்றும் புதுச்சேரி- திருவண்ணாமலை, வேலூர்- மங்களூர் சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234-ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய ரெயில் நிலையம் உள்ளது, இது சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுபோல் பரப்பளவில் பெரிய பஸ் நிலையமாக இங்குள்ள புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும்.
இந்நகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்கள் அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள், அரசு மருத்துவமனை, 2 பஸ் நிலையங்கள், விரிவுபடுத்தப்பட்ட ரெயில் நிலையம், புறவழிச்சாலை, மாவட்ட தீயணைப்பு அலுவலகம், அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகள் என சுமார் 30 கல்வி நிறுவனங்கள், 6 போலீஸ் நிலையங்கள் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

பெண் தலைவர்

இந்த நகராட்சியில் வார்டு எண் 25, 34, 42 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கும், 13, 19, 32 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 20, 21, 26, 30, 33, 40 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 1, 2, 5, 12, 14, 22, 23, 24, 27, 28, 29, 31, 35, 36, 37, 38, 39, 41 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் இதுவரை நடந்த தேர்தல்களில் நகராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரம் நகரமன்ற தலைவர் பதவியை கைப்பற்றப்போகும் பெண் யார்? என்று தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி நகர மக்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள், பெண் தலைவரை தேர்வு செய்து அவர் நகரமன்ற தலைவராக இருந்து நகராட்சியை அலங்கரிக்க உள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கல்மரங்கள், பாறை ஓவியங்கள், நடுக்கற்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் என்று நிறைய தொன்மை சான்றுகள் ஆங்காங்கே கிடைக்கப்பெற்று வருவதால் இதையெல்லாம் காட்சிப்படுத்தி வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள வசதியாக விழுப்புரம் நகரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக சிறிய நகை உற்பத்தியில் 2-வது இடத்தில் சிறந்து விளங்கும் விழுப்புரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்கள் ஈடுபடக்கூடிய ஒரு தொழிலாக நகைத்தொழில் இருந்து வருகிறது. சமீபகாலமாக நகை தொழில் சரிந்துள்ளதால் நகை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரம் நகரில் நகை தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்  என்பது நகை தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நகரில் தினம், தினம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும்.  விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமை பெறாமல் மந்தமாக நடைபெறுகிறது.  கழிவுறை, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் இப்பிரச்சினைகளை சரிசெய்து தர வேண்டும் என்பதே நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கைப்பற்றப்போவது யார்?

விழுப்புரம் நகராட்சியில் இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் கட்சி 7 முறையும், நீதிக்கட்சி 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே 8-வது முறையாக விழுப்புரம் நகராட்சியை கைப்பற்ற ஆளும்கட்சி என்ற பலத்துடன் தி.மு.க. முனைப்புகாட்டி வருகிறது. அதே சமயம் விழுப்புரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் வரிந்துகட்ட தயாராகியுள்ளது. இதனால் விழுப்புரம் நகராட்சியை கைப்பற்றுவதில் இரு கட்சிகளிடையேயும் கடும் போட்டி நிலவும் என்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Next Story