ஓட்டலில் சோதனை நடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்


ஓட்டலில் சோதனை நடத்தி பணம் கேட்டு  மிரட்டியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 7 Feb 2022 1:27 AM IST (Updated: 7 Feb 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஓட்டலில் சோதனை நடத்தி பணம் கேட்டு மிரட்டியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:
நெல்லையில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஓட்டலில் சோதனை நடத்தி பணம் கேட்டு மிரட்டியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு அதிகாரி

நெல்லை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஓட்டலுக்கு நேற்று காலையில் டிப்-டாப் உடை அணிந்த நபர் வந்தார். அவர், தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கொண்டு, ஓட்டலில் சோதனை செய்தார். அங்குள்ள உணவு வகைகளை பார்வையிட்டார்.

பின்னர் உணவுகளில் கலப்படம் இருப்பதாகவும், அதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தனக்கு பணம் தருமாறும் ஓட்டல் உரிமையாளரிடம் கூறினார்.
அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓட்டல் உரிமையாளர், இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் அந்த நபரை ஊழியர்கள் பிடித்து வைத்து கொண்டனர்.

போலீசார் விசாரணை

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்தார். ஆனால் அந்த அடையாள அட்டை மற்றொரு நபருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சிலரை காரில் அழைத்து வந்ததும், அவர்களை அங்கு இறக்கி விட்டு, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளுக்கு வந்து உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story