மருந்து நிறுவன அதிகாரியை வழிமறித்து கத்திமுனையில் ரூ.3 லட்சம் பறித்த கும்பல்


மருந்து நிறுவன அதிகாரியை வழிமறித்து கத்திமுனையில் ரூ.3 லட்சம் பறித்த கும்பல்
x
தினத்தந்தி 7 Feb 2022 1:35 AM IST (Updated: 7 Feb 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மருந்து நிறுவன அதிகாரியிடம் கத்திமுனையில் ரூ.3 லட்சத்தை பறித்து விட்டு காரில் தப்பிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, 
மதுரையில் மருந்து நிறுவன அதிகாரியிடம் கத்திமுனையில் ரூ.3 லட்சத்தை பறித்து விட்டு காரில் தப்பிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மருந்து நிறுவன அதிகாரி
மதுரை ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் நஜ்முதீன் (வயது 68). இவர் அந்த பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். விளாங்குடி கண்மாய்பாண்டியன் நகர் பாலம் அருகே வந்தபோது சாலையில் ஒரு கார் வழிமறித்து நின்றது. 
பின்னர் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், நஜ்முதீனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டது. பின்னர் வழிப்பறி கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நஜ்முதீன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மாநகர் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினார். துணை கமிஷனர் ராஜசேகர், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் பிளவர்சீலா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக நஜ்முதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ரூ.3 லட்சம்
அப்போது அவர் பணப்பையில் ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 650 இருந்ததாக தெரிவித்தார். மேலும் அந்த கும்பலில் ஒருவன் தங்களது நிறுவனத்தில் வேலை பார்த்த ஜெகதீஸ்வரன் என்றும் கூறினார். 
இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
5 பேர் கைது
இந்த நிலையில் கூடல்புதூர் பகுதியில் பணம் பறித்த கும்பலின் கார் வேகமாக செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு காரை துரத்திச்சென்று மடக்கினர். காரில் இருந்த 5 பேரையும் பிடித்து கூடல்புதூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த பணப்பையும் மீட்கப்பட்டது. நஜ்முதீனிடம் அலுவலக பணம் எப்போதும் இருக்கும் என்பதை ஜெகதீஸ்வரன்(23) தெரிந்து வைத்துள்ளார். 
இதனைத்தொடர்ந்து அதனை பறிக்கும் நோக்கத்தில் தனது சகோதரர் லோகேஸ்வரன்(21), சிலையநேரி ஜான் கிறிஸ்டோபர் லாரன்ஸ்(49), குமரவேல்(23) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கூட்டு சேர்த்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதன் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். வழிப்பறி நடந்த ஒரு மணி நேரத்தில் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மடக்கிப்பிடித்த தனிப்படையினரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story