புகார் பெட்டி
புகார் பெட்டி
சாலை சீரமைக்கப்பட்டது
அழகியபாண்டியபுரத்தை அடுத்த கேசவன்புதூரில் இருந்து மேலபுதூருக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தெருவிளக்கு வசதி வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சி 49-வது வார்டு செட்டித்தெருவில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வேலை முடிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் நாய் மற்றும் விஷ பிராணிகளின் நடமாட்டம் இருப்பதால் அந்த வழியாக வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயந்தி, செட்டித்தெரு.
சாலையில் வீணாகும் குடிநீர்
இடலாக்குடி சதாவதானி செய்கு தம்பி பாவலர்தெரு சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்களிலும், நடந்தும் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரஹ்மத் நிஷா, இடலாக்குடி.
கனரக வாகனங்களால் அச்சுறுத்தல்
சித்திரங்கோடு பகுதியில் அமைந்துள்ள கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் அதிக அளவில் கேரளா மற்றும் பிற இடங்களுக்கு கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அவற்றை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதி வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கனரக வாகனங்களில் இருந்து பறக்கும் பாறை பொடிகளால் இந்த பகுதி புழுதி மற்றும் புகைமண்டலமாக மாறுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கண் எரிச்சல், ஆஸ்துமா, சளி, ஒவ்வாமை போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். எனவே, கனரக வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித், சித்திரங்கோடு.
குளத்தை தூர் வார வேண்டும்
பூதப்பாண்டி அழகம்மன் கோவில் அருகே புலிவீரன் குளம் உள்ளது. இந்த குளம் தற்போது பராமரிப்பு இன்றி செடி, புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த குளத்தில் அடிமடை கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு பூதப்பாண்டி தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி, நீர்நிலை ஆதாரத்தை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.பாரதி, பூதப்பாண்டி.
சாலையை சீரமைக்க வேண்டும்
மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவில் சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த தரைக்கற்கள் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், மார்த்தாண்டம்.
வடிகால் ஓடை வேண்டும்
அழகியபாண்டியபுரம் மேல்கரைகாலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இதுவரை வடிகால் ஓடை அமைக்கவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்சாமி, மேல்கரைகாலனி.
Related Tags :
Next Story