வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்- விவசாயி சாவு


வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்- விவசாயி சாவு
x
தினத்தந்தி 7 Feb 2022 3:03 AM IST (Updated: 7 Feb 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்- விவசாயி பரிதாபமாக இறந்தனர்.

வேப்பந்தட்டை:

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த அரவிந்த்(19) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் சென்றுவிட்டு பின்னர் தொண்டமாந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜ், அரவிந்த் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரோக்கியராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி சாவு
இதேபோல் குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் (65). விவசாயி. இவர் தனது மனைவி பாஞ்சாலையுடன் தனியாக வசித்து வந்தார். பெருமாளுக்கு முருகேசன், திருநாவுக்கரசு, தென்னரசு என 3 மகன்கள் உள்ளனர். இதில் திருநாவுக்கரசு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன், தென்னரசு ஆகியோர் ராஜீவ்காந்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். அந்த வீட்டை பார்ப்பதற்காக பெருமாள் நடந்து சென்றார். அப்போது வேப்பூரில் இருந்து சாத்தநத்தம் கிராமத்திற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(53) மோட்டார் சைக்கிளில் சென்றார். எதிர்பாராதவிதமாக பெருமாள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பெருமாளும், சுப்பிரமணியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பெருமாளுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுப்பிரமணி மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story