பழைய வண்ணாரப்பேட்டையில் திருமணம் நிச்சயமான பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்


பழைய வண்ணாரப்பேட்டையில் திருமணம் நிச்சயமான பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 7 Feb 2022 4:26 PM IST (Updated: 7 Feb 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயமான இளம்பெண்ணுக்கு வீடு புகுந்து கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர், இதுபற்றி போலீசில் புகார் செய்ததால் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

கட்டாய தாலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 23). இவருடைய சகோதரர் இனியா (28). இவர், திருநங்கை ஆவார். அருண், தனது சகோதரருடன் சேர்ந்து 23 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அருண், இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, கையில் தாலியுடன் அத்துமீறி உள்ளே புகுந்து இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்றார்.

தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தார். உடனே அருண் மற்றும் அவரது சகோதரர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் வீட்டுக்கு வந்த தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை இளம்பெண் கூறினார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுபற்றி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசில் புகார் செய்ததை அறிந்த அருண், போலீஸ் விசாரணைக்கு பயந்து அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநங்கை கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற தம்பிக்கு உதவியாக இருந்த திருநங்கை இனியாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story