தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
தேனி:
உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 65). இவர், அதே ஊரை சேர்ந்த அகமது மீரான் என்ற விவசாயியிடம் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். நேற்று சந்திரனும், அகமது மீரானும் நில பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு ஜீப்பில் வந்தனர்.
பின்னர் சந்திரன் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் படிக்கட்டில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் டாக்டர்கள் ஓடி வந்து அவருடைய உடல் நிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் உடனடியாக அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர், சந்திரனை அவர் வந்த ஜீப்பில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story