கூடலூர் 6-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
கூடலூர் 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெற்றதால் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 76 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் 73 பேர் மட்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். இதில் 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அழகு, 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தேவி, 10-வது வார்டில் அ.ம.மு.க. ேவட்பாளர் அம்சவள்ளி ஆகிய 3 பேர் வாபஸ் பெற்றனர். இதனால் தற்போது மொத்தம் 70 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
கூடலூர் 6-வது வார்டுக்கு தி.மு.க.சார்பில் பத்மாவதி, அ.தி.மு.க.சார்பில் தேவி, பா.ஜ.க. சார்பில் விஜயா ஆகியோர் வேட்பாளர்களாக மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் பா.ஜ.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்படும் நிலை இருந்தது. இதனிடையே நேற்று எதிர்பாராதவகையில் அ.தி.மு.க வேட்பாளர் தேவி தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் தி.மு.க. வேட்பாளர் பத்மாவதி போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெற்றது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் பத்மாவதியின் கணவர் கூடலூர் நகர தி.மு.க. செயலாளராகவும், 1-வது வார்டில் வேட்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story