மாயூரநாதர் கோவில் யானை பராமரிப்பு குறித்து சிறப்புக்குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை பராமரிப்பு குறித்து சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை பராமரிப்பு குறித்து சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
குற்றச்சாட்டு
தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்புச்சட்டம் 2011-ன்படி மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை, திருச்சி மலைக்கோட்டை யானை லட்சுமி, திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை, குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி ஆகிய 4 யானைகள் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த 4 யானைகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசின் வனத்துறை சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் உள்ள வைல்ட் லைப் டிரஸ்டு ஆப் இந்தியா எனப்படும் இந்திய வன உயிரின அறக்கட்டளை துணைத்தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை ஆண்டனி, ரமேஷ் மற்றும் யானைகள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆகியோர் அடங்கிய தமிழக வனத்துறையின் சிறப்பு குழுவினர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு யானை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் கோவில் யானையான அபயாம்பிகையை பார்வையிட்டு, யானையின் உடல் அளவு, ஆரோக்கியம், யானை நடக்கும் தன்மை, பாதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பராமரிப்பு குறித்து யானை பாகனிடம் கேட்டறிந்தனர். மேலும் யானைக்கான ஆவணங்களையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
எதிர்ப்பு
இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மகா சபை நிர்வாகிகள் ஆய்வு குழுவில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால், அவர் இடம்பெற்றுள்ள குழுவினரை ஆய்வுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தகுதியின் அடிப்படையிலேயே தமிழக அரசு முறைப்படி குழுவினரை நியமனம் செய்துள்ளது என்று கூறி அதற்கான ஆவணங்களை அந்த குழுவினர் எடுத்துக்காட்டினர். இதையடுத்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வை நிறைவு செய்த பின்னர் இந்த குழுவினர் ஆய்வு தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story