கடலூர் முதுநகரில் அரசு டவுன் பஸ் மீது லாரி மோதல்; டிரைவர் படுகாயம்


கடலூர் முதுநகரில் அரசு டவுன் பஸ் மீது லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2022 9:59 PM IST (Updated: 7 Feb 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து பாதிப்பு

கடலூர் முதுநகர், 

கடலூர் அருகே உள்ள அய்யம்பேட்டையில் இருந்து கடலூருக்கு நேற்று அதிகாலை அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்சை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மணிமாறன்(வயது 47) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அப்போது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற லாரி அரசு டவுன் பஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு, முன்பகுதி சேதமடைந்தது. இதில் பஸ் டிரைவர் மணிமாறன் பலத்த காயமடைந்தார். பஸ்சில் பயணம் செய்த மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பஸ்சை அப்புறப்படுத்தியதோடு, காயமடைந்த மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story