நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த புள்ளிமான் செத்தது
நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த புள்ளிமான் செத்தது
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, மான் போன்ற சில விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதே போல் நேற்று காலை அக்கராயப்பாளையம் தகரை காப்புக்காடு பகுதியில் இருந்து ஒரு வயது மதிக்கத்தக்க பெண் மான் தண்ணீர் தேடி அருகில் உள்ள முருகன் என்பவருடைய விவசாய நிலத்துக்குள் வந்தது. இதைப்பார்த்த முருகன் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் மானை கடிப்பதற்காக துரத்தின. இதனால் பயந்து ஓடிய மான் தவறி கீழே விழுந்ததில் அதன் கழுத்து, வாய் போன்ற பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே முருகன் நாய்களை துரத்திவிட்டு படுகாயம் அடைந்த மானை பிடித்து பாதுகாப்பான இடத்தில் கட்டிப்போட்டார். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு கால்நடைத்துறை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக செத்தது. இதையடுத்து அந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
Related Tags :
Next Story