வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
விழுப்புரத்தில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம், பிப்.8-
விழுப்புரத்தில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுப நிகழ்ச்சி
விழுப்புரம் சுதாகர் நகர் ராஜாதேசிங்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்கருணாநிதி மகன் குமரன் (வயது 43).
இவர் கடந்த 5-ந் தேதியன்று தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு செஞ்சி அருகே கல்லடிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சென்றார்.
இந்த சூழலில் நேற்று காலை குமரன் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அருகில் இருப்பவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுபற்றி அவர்கள், குமரனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், கல்லடிக்குப்பத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சுதாகர் நகருக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இரும்பு பீரோ, மர பீரோ ஆகிய 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். குமரனின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளை போய்விட்டதே என்று எண்ணி அவர் வருத்தமடைந்தார்.
கதவு பூட்டு உடைப்பு
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் குமரன் வீட்டின் முன்பக்க மரக்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். குமரன் வீட்டின் எதிரே ஒரு வாடகை வீட்டில் விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் உமாசங்கர் என்பவர் வசித்து வருகிறார். போலீஸ் அதிகாரி வீட்டின் அருகே நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் போதிய தெருமின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி அப்பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story