திருவாரூர்-காரைக்குடி ரெயிலில் பயண நேரம் குறைப்பு


திருவாரூர்-காரைக்குடி ரெயிலில் பயண நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 11:28 PM IST (Updated: 7 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-காரைக்குடி ரெயிலில் பயண நேரம் குறைக்கப்பட்டதையொட்டி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருவாரூர்:
திருவாரூர்-காரைக்குடி ரெயிலில் பயண நேரம் குறைக்கப்பட்டதையொட்டி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
டெமு ரெயில் இயக்கம் 
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள்  முடிந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் டெமு ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் கடந்த 2020-ம்  ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரெயில் உபயோகிப்போர் சங்கம் மற்றும் எம்.பி.க்கள் ரெயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. 
இந்த ரெயில் பாதையில் போதிய கேட் கீப்பர்கள் இல்லாததால் மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இந்த மொபைல் கேட் கீப்பர் ரெயிலில் பயணம் செய்து அந்தந்த ரெயில்வே கேட் அருகில் நிறுத்தப்பட்டு, அந்த கேட் மூடப்பட்டு, ரெயில் அந்த இடத்தை கடந்ததும் மீண்டும் கேட் திறக்கப்படும் வழிமுறையில் செயல்பட்டது.
கேட் கீப்பர்கள் நியமனம்
இதன் காரணமாக திருவாரூர்-காரைக்குடி செல்ல பயண நேரம் 6 மணி நேரமாக இருந்து வந்தது. பின்னர் திருவாரூர்-பட்டுக்கோட்டை வரையிலான பாதையில் ரெயில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் பயண நேரம் குறைந்தது. எனவே இந்த தடத்தில் முழுமையாக ரெயில்வே கேட் கீப்பர்கள் நியமித்து பயணிகளுக்கு விரைவு சேவையை ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் ரெயில்வே துறைக்கு  கோரிக்கை விடுத்தனர்.
பயண நேரம் குறைப்பு 
இதையடுத்து நேற்று முதல் திருவாரூர்-காரைக்குடி வழிதடத்தில் கேட் கீப்பர்கள் முழுமையாக நிரப்பட்டு, டெமு ரெயிலின் பயண நேரம் 3 மணி 30 நிமிடமாக குறைக்கபட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 8.15 மணிக்கு திருவாரூரில்  இருந்து டெமு ரெயில் புறபட்டது. அப்போது ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள், ரெயில்வே துறையினர், பயணிகள், ரெயில்வே போலீசாருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதுகுறித்து ெரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரெயில் உபயோகிப்போர் சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு மையம் போன்றவைகளின் கோரிக்கையின் அடிப்படையில் செல்வராஜ் எம்.பி. தொடர் முயற்சியால் திருவாரூர்-காரைக்குடி வழிபாதையில் ரெயில்வே கேட் கீப்பர் நியமிக்கப்பட்டு பயண நேரத்தை 3 மணி 30 நிமிடமாக குறைத்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை மேலாளர் (இயக்குதல்) ஹரிகுமார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் 
சென்னை மற்றும் வடமாநிலங்களிலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். இந்த தடத்தில் போதுமான அளவிற்கு பயணிகள் ரெயில்கள் இயக்கவும், சரக்கு போக்குவரத்தினை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story