நகை கொள்ளையடித்த வழக்கில் தந்தை மகன் உள்பட 4 பேர் கைது
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தி நகை கொள்ளையடித்த வழக்கில் தந்தை மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தி நகை கொள்ளையடித்த வழக்கில் தந்தை மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
நகை கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரியை அடுத்த கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 75), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
இவருடைய மனைவி சரோஜா (70). இவர்களுடைய மகள் கல்யாணி (45). சிங்காரப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3-ந் தேதிஇரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் குப்புசாமியின் வீட்டிற்குள் புகுந்து 3 பேரையும் கத்தியால் குத்தி சரோஜா மற்றும் கல்யாணி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து குப்புசாமி திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருப்பத்தூர் திருமால் நகர் ஏரிகோடி பகுதியில் வசிக்கும் முருகன் (42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
விசாரணையில் அவர் தனது கூட்டாளிகளான ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பங்கியான் வட்டம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் (45), இவரது மகன் அரவிந்த்குமார் (22), ஏலகிரி கிராமம் பெரியான் வட்டம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீகாந்த் என்கிற சேட்டு (20) ஆகியோருடன் சேர்ந்து குப்புசாமி, அவரது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி நகைகளை கொள்ளையடித்தது ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கம்மல், மூக்குத்தி மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story