‘நீட்’ தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே தி.மு.க.தான். ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


‘நீட்’ தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே தி.மு.க.தான். ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Feb 2022 11:48 PM IST (Updated: 7 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே தி.மு.க.தான் என வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்

வேலூர்

‘நீட்’ தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே தி.மு.க.தான் என வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

அறிமுக கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாசம், வேலூர் தொகுதி முன்னாள் செயலாளர் சி.கே.சிவாஜி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
 ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

அஸ்திவாரம் போட்டது தி.மு.க.தான்

கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டோம்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. 10 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்து வருகிறது. தேர்தலின்போது கொடுத்த 505 வாக்குறுதிகளை தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து ‘நீட்’ ரத்து என கூறினர். ஆனால் ‘நீட்’ தேர்வுக்கு மூலகாரணமாக அஸ்திவாரம் போட்டது தி.மு.க. தான். தற்போதுவரை அதை ரத்து செய்யாமல் நாடகமாடி வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோய் விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தற்போது 531 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்புபடி கவர்னர் அவரது பணியை செய்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரை திரும்ப பெறச்சொல்லி பகட்டு அரசியலை தி.மு.க. செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரச்சினை செய்கிறார்கள். இது என்ன நியாயம். நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து விளம்பர அரசியலை தி.மு.க.செய்து வருகிறது.

ஜல்...ஜல்...ஜல்...

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சினை உலகம் முழுவதும் பரவியது. இதுதொடர்பாக அப்போது பிரதமரிடம் பேசி 24 மணி நேரத்தில் தீர்வு கண்டோம். இதனால் தான் தமிழகம் முழுவதும் ஜல்...ஜல்...ஜல்... என ஜல்லிக்கட்டு ஓடுகிறது.
பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த பொருட்களை மக்களால் சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு கொண்டு போய் வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் படி அவர்கள் பணமும் கொடுக்கவில்லை.

மக்கள் தற்போது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்குகளை கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story