குடியாத்தம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்


குடியாத்தம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Feb 2022 11:50 PM IST (Updated: 7 Feb 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.
காளைவிடும் விழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 175-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

காளை விடும் திருவிழாக்கு ஊர் கவுண்டர் கே.குப்புசாமி,  நாட்டாண்மை எஸ்.நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். குடியாத்தம் தாசில்தார் லலிதா தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. 

26 பேர் காயம்

அப்போது காளைகள் முட்டியதில் 26 பேர் சிறு காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த ஒரு காளையின் கயிறு பூங்குளம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கழுத்தில் சுற்றியதால் பலத்த காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு 55 பரிசுகள் வழங்கப்பட்டது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கணபதி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, கிராம உதவியாளர் துரைராஜ் உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் என்.முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவேல்முருகன், துணை தலைவர் பி.தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், அக்ராவரம் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Next Story