நாகை மீனவர்கள் 24 பேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்


நாகை மீனவர்கள் 24 பேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Feb 2022 11:53 PM IST (Updated: 7 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன்பிடிக்க முயன்ற நாகை மீனவர்கள் 24 பேர் இந்திய கடற்படையினரிடம் சிக்கினர். அவர்கள் ராமேசுவரம் முகாமுக்கு அழைத்து வரப்பட்டு எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று ராமேசுவரம் முதல் கோடியக்கரை வரையிலான இந்திய கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நடுக்கடலில் மீன்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த 2 மீன்பிடி படகுகள் எல்லை தாண்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த 2 படகுகளையும் தடுத்து நிறுத்திய இந்திய கடற்படையினர் அந்த படகில் இருந்த 24 மீனவர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்களது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை கேட்டு சோதனை செய்தனர். அப்போது படகில் இருந்த பல மீனவர்களிடம் மீன்பிடி அடையாள அட்டை இல்லை என்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அந்த 2 படகுகளுடன் 24 மீனவர்களை, ராமேசுவரம் இந்திய கடற்படை முகாமுக்கு கடற்படையினர் அழைத்து வந்தனர். அதன் பின்னர் ராமேசுவரம் மீன் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அறிவுரை செய்து 24 மீனவர்களையும் 2 படகுடன் மீண்டும் சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தனர்.
இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 2 படகுகளும் நாகை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவை என்பதும், அதில் இருந்த 24 பேரும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story