நாகர்கோவிலில் பேராசிரியர் மனைவியை கொன்ற உறவினர் கைது


நாகர்கோவிலில் பேராசிரியர் மனைவியை கொன்ற       உறவினர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2022 11:58 PM IST (Updated: 7 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நகைக்கு ஆசைப்பட்டு பேராசிரியர் மனைவியை கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் நகைக்கு ஆசைப்பட்டு பேராசிரியர் மனைவியை கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேராசிரியர் மனைவி கொலை
நாகர்கோவில் அனாதைமடம் கவிமணி நகரை சேர்ந்தவர் செல்லையா (வயது 76), ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருடைய மனைவி பேபி சரோஜா (70). இவர்களுடைய 4 மகள்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் செல்லையாவும் இறந்து விட்டதால் வீட்டில் பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் பேபி சரோஜா படுகொலை செய்யப்பட்டார். மர்மநபர் அவரை கொன்று மாடி வழியாக குதித்து தப்பி சென்றதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் மர்மநபர் தப்பிக்கும் முயற்சியில் அவர் கொண்டு வந்த ஸ்கூட்டரையும் வீட்டு முன்பு விட்டு சென்றார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை 
கொலை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பேபி சரோஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அதே சமயத்தில் வீடு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் மாடியில் பேபி சரோஜாவின் நகையும், தங்க வளையல்களும் கிடந்தன. இதனால் கொள்ளையன் தான் வீட்டுக்குள் புகுந்து பேபி சரோஜாவை கொலை செய்திருக்கலாம், தப்பிக்க முயன்ற போது அந்த கொள்ளையன் நகையை தவற விட்டு சென்றிருக்கலாம் என போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட நகை மற்றும் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
கொலையாளி சிக்கினார்
அதே சமயத்தில் மர்மநபர் விட்டு சென்ற ஸ்கூட்டர் யாருடையது? என விசாரணை அடுத்த கட்டத்துக்கு சென்றது. இதில் அந்த ஸ்கூட்டர் பூதப்பாண்டி சிறமடத்தை சோ்ந்த பாஸ்கர் (46) என்பவருக்கு சொந்தமானது என்பதும், தற்போது அவர் நாகர்கோவில் பார்க் தெருவில் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. 
இதை தொடர்ந்து பாஸ்கரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதற்கிடையே மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பேபி சரோஜாவின் வீட்டின் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் பாஸ்கர் ஒளிந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
நகைக்காக...
உடனே பாஸ்கரை போலீசார் பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், பேபி சரோஜாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அவர் நகைக்காக தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவலையும் தெரிவித்துள்ளார்.   கொலை செய்யப்பட்ட பேபி சரோஜாவுக்கு பாஸ்கர் தூரத்து உறவினர் ஆவார். அடிக்கடி பேபி சரோஜாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். வரும் போதெல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறேன் என பேபி சரோஜாவிடம் புலம்பியதோடு பணம் தந்து உதவ வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனால் பாஸ்கருக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
கீழே தள்ளியதில்...
மேலும் பேபி சரோஜா கழுத்தில் நகை அணிந்திருப்பதையும், கையில் தங்க வளையல் போட்டிருப்பதையும் பார்த்த பாஸ்கருக்கு அதனை கொள்ளையடிக்கும் எண்ணமும் ஏற்பட்டுள்ளது.
அவரது திட்டப்படி வீட்டுக்கு வந்த பாஸ்கர், பேபி சரோஜா அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் சத்தம் போடவே பாஸ்கருக்கு ஒருவித அச்சம் உருவாகி விட்டது. உடனே கீழே தள்ளியதில் பேபி சரோஜாவுக்கு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததால் தப்பிக்கும் முயற்சியில் பறித்த நகை, வளையலை அங்கேயே பாஸ்கர் போட்டு விட்டு சென்றுள்ளார். இந்த தகவலை பாஸ்கர் வாக்குமூலமாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். டிரைவராக வேலை பார்த்து வந்த பாஸ்கருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story