அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Feb 2022 12:17 AM IST (Updated: 8 Feb 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

2 மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்
புகார் பெட்டி
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திங்கட்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
ஊதியம் வழங்கப்படவில்லை
அந்த புகார் பெட்டியில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2020-ல் நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜனவரி மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது சிரமங்களை போக்கும் வகையில் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story