குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:975 வார்டுகளுக்கு 4,366 பேர் போட்டி


குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:975 வார்டுகளுக்கு  4,366 பேர் போட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 12:23 AM IST (Updated: 8 Feb 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 975 வார்டுகளுக்கு 4,366 பேர் போட்டியிடுகிறார்கள். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நாகர்கோவில், 
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 975 வார்டுகளுக்கு 4,366 பேர் போட்டியிடுகிறார்கள். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கும், குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 4-ந் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 5-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. நேற்று வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாள் ஆகும். இதையடுத்து மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாநகராட்சியில் 356 பேர்
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இவற்றில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 384 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நேற்று 20 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 52 வார்டுகளிலும் மொத்தம் 356 பேர் போட்டியிடுகிறார்கள்.
குளச்சல்- பத்மநாபபுரம்
குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளுகு்கு 83 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று 4 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 78 பேர் போட்டியிடுகிறார்கள்.
பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 115 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று ஒருவர் மனுவை வாபஸ் பெற்றார். இதனால் மொத்தம் 111 பேர் களத்தில் உள்ளனர்.
குழித்துறை-கொல்லங்கோடு
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 86 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 83 பேர் போட்டியில் உள்ளனர்.
கொல்லங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 176 பேர் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் எதுவும் தள்ளுபடி ஆகவில்லை. நேற்று 11 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 165 பேர் களத்தில் உள்ளனர்.
4 பேர் போட்டியின்றி தேர்வு
51 பேரூராட்சிகளில் 3,737 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 132 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் 2-வது வார்டு மற்றும் 3-வது வார்டிலும், கணபதிபுரம் பேரூராட்சி 13-வது வார்டு, இரணியல் பேரூராட்சி 12-வது வார்டு ஆகியவற்றிலும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 3573 பேர் போட்டியிடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 979 வார்டுகளுக்கு 4581 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களில் 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 170 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 975 வார்டுகளுக்கு மொத்தம் 4,366 பேர் மோதுகிறார்கள்.
சின்னங்கள் ஒதுக்கீடு
இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடந்தது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சியின் சின்னங்களும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த 30 சின்னங்களில் இருந்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தபோது சில பேரூராட்சிகளில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக சில இடங்களில் சின்னம் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story