அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை தந்துள்ளோம்


அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை தந்துள்ளோம்
x
தினத்தந்தி 8 Feb 2022 1:38 AM IST (Updated: 8 Feb 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை தந்துள்ேளாம் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சிவகாசி, 
அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை தந்துள்ேளாம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். 
பொய் வழக்குகள்
சிவகாசியில் நேற்று மாநகராட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. நடைபோடுகிறது. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தவிடுபொடியாக்கும் சக்தி அ.தி.மு.க.வினருக்கு உண்டு. யாரோ ஒருவர் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டார். அதை கே.டி.ராேஜந்திர பாலாஜியிடம் கொடுத்ததாக கூறி உள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. இந்த அரசு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. 
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் பணி ஆற்றக்கூடாது என்பதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பொய் வழக்குகளை உடைத்து எறிவோம். மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம். வெற்றி பெறுவோம்.
சட்டம்-ஒழுங்கு
தமிழகத்தில் கடந்த 8 மாத தி.மு.க. ஆட்சிகாலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டன.
சிவகாசி என்று சொன்னால் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இது ஒரு குட்டி ஜப்பான். 2017-ல் நான் முதல்- அமைச்சராக இருந்த போது திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சிவகாசி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தேன். தற்போது சிவகாசி மாநகரட்சியாக தரம் உயர்ந்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்.
ரூ.100 கோடி நிதி
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சிவகாசி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.5 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க வசதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. நூற்றாண்டு விழா கண்ட சிவகாசி நகராட்சிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சிறப்பு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. 
அதேபோல் திருத்தங்கல் நகர பகுதியில் ரூ.40 கோடி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன.  சிவகாசியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் தொடங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் பல பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பல ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். திருத்தங்கல் பகுதியில் இருந்த ஆரம்பசுகாதார நிலையம் அ.தி.மு.க. அரசின் போதுதான் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. திருத்தங்கல் பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்து இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்கினோம். சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டது.
மருத்துவக்கல்லூரி
விருதுநகரில் அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.385 கோடி செலவில் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் பல சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
 மண்ரோடுகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.. விருதுநகர் மாவட்ட மக்களின் முக்கிய தொழில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்திதான். இந்த தொழிலுக்கு மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். மத்திய அரசிடம் பேசி வரி குறைக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தின் போது பாதிக்கப்படும் தொழிலாளர்களை காக்க சிவகாசியில் நவீன தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு முதன் முதலில் இழப்பீடு தொகை வழங்கியதும் ஜெயலலிதா அரசுதான். இவ்வாறு விருதுநகர் மாவட்டம் முன்னேற அ.தி.மு.க. ஆட்சியில்தான் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப்பட்டன.. 
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சாத்தூர் ராஜவர்மன்,  முன்னாள் எம்.எல்.ஏ, சந்திராபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story