‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Feb 2022 1:48 AM IST (Updated: 8 Feb 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் மெயின்ரோடு, பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்களை துரத்தி சென்று நாய்கள் கடித்து வருகின்றன. எனவே சலங்கபாளையம் மற்றும் சுற்றுப் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க சலங்கபாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

  ஸ்ரீதர், சலங்கபாளையம்
  
ரோடு சீரமைக்கப்படுமா?
  அந்தியூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் உள்ள பாதி ரோடு மண் சாலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க உடனே ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அருள், அந்தியூர்.
  
கீழே விழுந்த அறிவிப்பு பலகை 

  அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் ஒரு இடத்தில் வளைவு இருக்கிறது. அங்கு வளைவு இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு பலகை கீழே விழுந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வளைவு இருப்பது குறித்து தகவல் தெரியாமல் போகிறது. எனவே அதை சீரமைத்து முறையாக அதற்குண்டான கம்பியில் பொருத்தி வைக்க வேண்டும்.
  பூபதி, அந்தியூர்.
  
குண்டும்-குழியுமான ரோடு

  பவானி தாலுகா ஆண்டிகுளம் அருகே உள்ளது பழைய காடையம்பட்டி. இங்கு, அந்தியூர் மெயின் ரோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக விநாயகர் கோவில் வீதி உள்ளது. இந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து தார்சாலை அமைத்து தர ஆவன செய்வார்களா?
  பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
  
சாக்கடை அடைப்பு சரிசெய்யப்படுமா?

  நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இதன் முன்புள்ள கழிவு நீர் செல்லும் பாதையில் கடந்த 10 நாட்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், நம்பியூர்.
  
கூடுதல் மின்விளக்குகள் தேவை

  ஈரோடு அருகே வடபழனியில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து வரும் வெளிச்சம் போதுமானதாகவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. எனவே கூடுதலாக மின்விளக்குகள் பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பிரகாஷ், வடபழனி.
  


Next Story