ஈரோடு மாவட்டத்தின் 2-வது தலைநகராக விளங்குவது கோபி செட்டிப்பாளையம்.
ஈரோடு மாவட்டத்தின் 2-வது தலைநகராக விளங்குவது கோபி செட்டிப்பாளையம்.
ஈரோடு மாவட்டத்தின் 2-வது தலைநகராக விளங்குவது கோபி செட்டிப்பாளையம். கோபி என்ற பெயருடன் அழைக்கப்படும் கோபி செட்டிபாளையத்துக்கு சின்ன கோடம்பாக்கம் என்ற பெயரும் உண்டு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் எடுக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களிலும் கோபியில் ஒரு காட்சியாவது இருக்கும் வகையில் படப்பிடிப்புகள் நடந்தன.
அழகின் உருவம்
செயற்கையான அரங்குகள் அமைப்பதில் இருந்து விடுபட்ட திரைப்பட இயக்குனர்கள் இயற்கையின் மடிக்குள் படப்படிப்பு நடத்த தொடங்கியபோது அவர்களின் தொட்டிலாக கோபி இருந்தது. தூரத்து மலைக்காட்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் வாய்க்கால்கள், வயல்களின் ஊடே கருப்பாக நீண்டு கிடக்கும் சாலைகள், நீரில் நீந்தும் வாத்துகள், வயலில் மேயும் ஆடுகள், வானில் தவழ்ந்து மலையில் மோதும் மேகக்காட்சிகள் என்று அழகின் மொத்த உருவமாக விளங்கும் கோபி இன்னொரு மறுமலர்ச்சிக்காக காத்திருக்கிறது.
சுமார் 20 ஆண்டுகளாக திரைப்பட படப்பிடிப்பு இல்லாததால் களை இழந்து கிடக்கும் கோபி வரும் நகர்ப்புற தேர்தலையும் தனது வளர்ச்சிக்கான களமாக எதிர்பார்க்கிறது. அழகியலில் மட்டுமின்றி, அரசியலிலும் கோபி ஒரு மையமாகவே இருந்தது. சுதந்திர போராட்ட காலத்துக்கு முன்பே கோபிசெட்டிபாளையம் தொகுதி பரந்து விரிந்து கிடந்தது. கோபி சட்டமன்ற தொகுதி சாம்ராஜ்நகர் வரை பரந்து இருந்தது. இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. தமிழகத்தின் பழைய நகராட்சிகளில் ஒன்றாக கோபி விளங்குகிறது. இங்கு 30 வார்டுகள் உள்ளன. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த கோபி, பின்னர், அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறியது.
கோபி பண்டைய காலத்தில் இருந்தே ஒரு நகர்பகுதியாகவே இருந்தது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே புகழ் பெற்றபகுதியாக கோபி இருந்ததாக கூறப்படுகிறது. கோபி செட்டி பிள்ளான் என்பவருடைய பெயரில் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. அவர் பாரி வள்ளலுக்கு நிகராக போற்றப்பட்டவர் என்பதை கோபியின் வரலாறு கூறுகிறது. இவர் வள்ளலாக இருந்ததால் அவரைத்தேடி எப்போதும் பலரும் வந்து பொருட்கள் பெற்றுச் செல்வது வழக்கம்.
அள்ளிக்கொடுத்தார்...
இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் கோபி செட்டி பிள்ளான் இன்னும் கொடுத்து புகழ் பெற கிடைத்தது இந்த வாய்ப்பு. அவர் பொற்குவியலை கொண்டு வந்து அவரை தேடி வந்த அனைவருக்கும் அள்ளிக்கொடுத்தார் என்று பாரியூர் கொண்டத்துக்கு காளியம்மன் ஆற்றுப்படை கூறுகிறது. இன்றும் கோபியை சுற்றி பச்சை பரப்பெங்கும் விரிந்து கிடக்கும் வயல்கள் ஈரோடு மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக, பசிபோக்கும்நெல் தரும் வயல்களாக புகழ் சேர்த்து வருகின்றன.
கோபி நகரம் நகராட்சியாக கடந்த 1949-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அதில் இருந்து நகராட்சி தலைவர்களாக இருந்தவர்கள் வருமாறு:- 1.எம்.பழனிச்சாமி முதலியார் 2.பி.கே.நல்லாக்கவுண்டர் 3.ஜி.எஸ்.லட்சுமணன் (லட்சுமணய்யர்) 4.பி.கே.முத்துவேலப்பகவுண்டர் 5.பி.என்.நஞ்சப்பன் 6.பி.என்.நல்லசாமி 7.கே.கே.கந்தவேல் முருகன் 8.எம்.ரேவதிதேவி ஆகியோர் இதுவரை நகர்மன்ற தலைவர் பதவியை அலங்கரித்து உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்
தற்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. கோபி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 47 ஆயிரத்து 545 பேர். இதில் ஆண்கள் 22 ஆயிரத்து 522, பெண்கள் 25 ஆயிரத்து 22 பேர், 3-ம் பாலினத்தவர் ஒருவர் உள்ளார். 30 வார்டுகளிலும் சேர்ந்து இந்த முறை 145 பேர் போட்டியில் உள்ளனர்.
கோபி நகரை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நகராக உள்ளது. இங்கு தொழில் வளம், குறிப்பாக திரைப்பட தொழில் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. குப்பையில் இருந்து விடுதலை, தினசரி தண்ணீர் வினியோகம் என்பது கனவாக உள்ளது. சாக்கடைகள் தேங்கி கிடப்பதும், மழைக்காலங்களில் சாக்கடைகள் பொங்க வழிந்து வீடுகளுக்குள் செல்வதும் தவிர்க்க முடியாத சிரமங்கள் பட்டியலில் உள்ளது. கொசுத்தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பொதுமக்கள் அலறும் நிலை இருக்கிறது. பழுதடைந்த சாக்கடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. கோபியின் பெருமையாக இருந்த கீரிப்பள்ளம் இன்று சாக்கடை பள்ளமாக மாறி, துர்நாற்றம் வீசுவதுடன் கோபியின் சாபமாக மாறிப்போனது. கீரிப்பள்ளத்தை முழுமையாக தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.
வெற்றி யாருக்கு?
கோபி நகராட்சி முழுமையான விவசாயம் சார்ந்த பகுதி. சுற்றிலும் விளைநிலங்களை கொண்டது. சமீப காலமாக தொழில் வளர்ச்சியும் உள்ளது. சில தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கோபியை சுற்றி உள்ள பகுதிகளில் தொடங்கி உள்ளன. கோபியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ள நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் புதிய தொடக்கத்தை கோபி நகருக்கு கொடுக்கும். உள்ளாட்சி மூலம் புதிய பல மாற்றங்கள் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. வரும் தேர்தல் கோபிக்கு மறுமலர்ச்சியாக இருக்குமா அல்லது வழக்கம்போலகடந்து செல்லும் ஒரு உள்ளாட்சி அமைப்பாக மட்டுமே இருக்குமா? என்பது காலத்தின் கையில் உள்ளது.
கோபி நகரை பொறுத்தவரை இங்கு அ.தி.மு.க. வெற்றி என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தி.மு.க. இந்த நகராட்சியை கைப்பற்ற போராடி வருகிறது. இந்த தேர்தல் கோபி நகரை கைப்பற்ற அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நடக்கும் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களின் ஒரு விரல்...
Related Tags :
Next Story