விளை நிலத்தில் தார்சாலை அமைப்பதாக கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி தர்ணா- கோபி அருகே பரபரப்பு


விளை நிலத்தில் தார்சாலை அமைப்பதாக கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி தர்ணா- கோபி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 1:49 AM IST (Updated: 8 Feb 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே விளை நிலத்தில் தார்சாலை அமைப்பதாக கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடத்தூர்
கோபி அருகே விளை நிலத்தில் தார்சாலை அமைப்பதாக கூறி ஊராட்சி அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
குடும்பத்துடன் தர்ணா
கோபி அருகே உள்ள சுட்டிக்கல்மேடு, ராக்கண கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் என்கிற பழனிச்சாமி (வயது 70). இவர் நேற்று தன்னுடைய குடும்பத்துடன் கையில் மண்எண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு கடத்தூர் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பழனிச்சாமி குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி அலுவலகம் முன்பு உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சுமார் 15 நிமிடம் அலுவலகம் முன்பு அவர் உட்கார்ந்து இருந்தார். 
அலுவலர்கள் வரவில்லை
அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடைய விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனக்கு பிழைக்க வேறு வழியில்லை. அதனால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்றார். ஆனால் அலுவலர்கள் யாரும் வராததால் அங்கிருந்து குடும்பத்தினருடன் கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். 
புகார் மனு
இதைத்தொடர்ந்து போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். 
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சுட்டிக்கல்மேடு ராக்கணகவுண்டன்புதூர் பகுதியில் எனக்கு சொந்தமாக 40 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதன் நடுவே தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் என்னுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. எனவே என்னுடைய நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
4 பேர் கைது
இந்தநிலையில் கடத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாலும், அரசு அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதாலும் தங்கவேல், துரைசாமி (60), ரத்தினாள் (50), சரசாள் (65) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

Next Story