“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுங்கள்” - எடப்பாடி பழனிசாமி
“பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்” என்று நெல்லை பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ெநல்லைக்கு வந்தார்.
பிரசார பொதுக்கூட்டம்
பாளையங்கோட்டை ேக.டி.சி. நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களை ஆதரித்து பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தது. 8 மாதங்கள் ஆகியும் எந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள், மக்கள் என்ன நன்மை அடைந்தார்கள்? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைக்கப்பட்டு முடிந்துள்ள திட்டங்களை மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.
கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில் 525 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 200 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார்கள். அது என்னவென்று மக்கள் தேடி குழம்பி போய் உள்ளனர். பொய் பேசுவதற்கு பட்டம் கொடுக்க வேண்டுமானால் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள்
ரேஷன் கார்டுகள் மூலம் தாய்மார்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாக இதுபற்றி வாயே திறக்கவில்லை. கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள். இதேபோல் முதியோர் ஓய்வூதியமும் சொன்னபடி உயர்த்தி வழங்கவில்லை. இளைஞர்கள் கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. இதுவரை அதுபற்றியும் வாய் திறக்கவில்லை.
இதுதவிர 5 சவரனுக்கு கீழ் நகையை அடகு வைத்தவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். இதனால் 48 லட்சம் பேர் நகைக்கடன் வைத்துள்ளனர். இதில் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறிவிட்டனர். மீதி 35 லட்சம் பேரை ஏமாற்றி விட்டார்கள். இதன்மூலம் தி.மு.க. அரசு பொய், பித்தலாட்ட அரசு என்பது நிரூபணமாகி விட்டது. நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களாகிய நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
ரூ.500 கோடி ஊழல்
அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 கொடுத்தோம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று தொடர்ந்து இருந்ததால், குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசாக கொடுத்தோம்.
அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் என்ன என கேட்டார். அப்படி கேட்ட மு.க.ஸ்டாலின் தற்போது ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
தற்போது தி.மு.க. ஆட்சியில் 21 பொங்கல் தொகுப்பு கொடுப்பதாக கூறினார்கள். 21 பொருட்கள் முழுமையாக கொடுக்கவில்லை. வழங்கிய பொருட்களும் தரமாக இல்லை. தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பில் மட்டும் ரூ.500 கோடி ஊழல் செய்து உள்ளார்கள்.
‘நீட்’ தேர்வு ரகசியம்
‘நீட்’ தேர்வு கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வந்தது மத்திய காங்கிரஸ் அரசுதான். அந்த மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. தி.மு.க. எம்.பி. காந்திராஜன் மத்திய சுகாதார துறை இணை மந்திரியாக இருந்தார். அதை தடுக்க குரல் கொடுத்தது அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அப்படியே மாற்றி பேசுகிறார்.
கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆன உடன் முதல் கையெழுத்து ‘நீட்’ தேர்வு விலக்கு என கூறினார். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இதுதவிர உதயநிதி ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தந்தை மு.க.ஸ்டாலினிடம் இருப்பதாக கூறினார். அந்த ரகசியத்தை பயன்படுத்தி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டியதுதானே. அதற்கு மாறாக அ.தி.மு.க. மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.
வெற்றி பெற செய்யுங்கள்
நெல்லை மாநகர் சீர்மிகு நகரமாக மாறி வருகிறது. அதற்கு ரூ.990 கோடி ஒதுக்கினோம். 35 பணிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. பெரும்பகுதி பணி முடிந்து உள்ளது. மீதி பணியை அ.தி.மு.க. மேயர் வந்தால்தான் வேகமாக முடிக்க முடியும். எனவே, நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதே போல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story