எனக்கு குழந்தையை கொடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ஏமாற்றிவிட்டார்; பெண் பரபரப்பு புகார்


எனக்கு குழந்தையை கொடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ஏமாற்றிவிட்டார்; பெண் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 8 Feb 2022 2:22 AM IST (Updated: 8 Feb 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

தான் ரூ.2 கோடி கேட்டு மிரட்டவில்லை என்றும், தனக்கு குழந்தையை கொடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்குமார் பட்டீல் தெல்குர் ஏமாற்றிவிட்டதாகவும் பெண் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

பெங்களூரு: தான் ரூ.2 கோடி கேட்டு மிரட்டவில்லை என்றும், தனக்கு குழந்தையை கொடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்குமார் பட்டீல் தெல்குர் ஏமாற்றிவிட்டதாகவும் பெண் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

டுவிட்டரில் புகார்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் டுவிட்டருக்கு கடந்த 5-ந் தேதி பெண் ஒருவர் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் கலபுரகி மாவட்டம் சேடம் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்குமார் பட்டீல் தெல்குர் என்னுடன் நெருங்கி பழகினார். அவர் மூலம் எனக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை என்னுடையது இல்லை என்று தற்போது அவர் என்னை ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து ராஜ்குமார் பட்டீல் தெல்குர் எம்.எல்.ஏ.வின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து அவர் உடனடியாக விதான சவுதா போலீஸ் நிலையத்தில் தன் மீது முதல்-மந்திரியிடம் புகார் அளித்த பெண் உள்பட சிலர் மீது ரூ.2 கோடி கேட்டு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

இதற்கிடையே ராஜ்குமார் பட்டீல் தெல்குரிடம், ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய 4 பேரை தமிழ்நாட்டில் வைத்து விதான சவுதா போலீசார் கைது செய்ததாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணின் வீட்டிற்கு சென்ற விதான சவுதா போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் இரவு வரை விசாரணை நடத்திவிட்டு போலீசார் அவரை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பெண், தனது வக்கீலான ஜெகதீஷ் என்பவர் உதவியுடன் கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சுப்பிரமணிஷ்வரர் ராவ் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கூடுதல் கமிஷனரிடம் என்னுடன் தொடர்பில் இருந்த ராஜ்குமார் பட்டீல் தெல்குர் மூலம் எனக்கு குழந்தை பிறந்து உள்ளது. அந்த குழந்தையை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். என்னை பயன்படுத்தி கொண்டு ஏமாற்ற பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு அங்கீகாரம் வேண்டும்

இந்த நிலையில் வக்கீல் ஜெகதீஷ் வீட்டில் வைத்து அந்த பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

ராஜ்குமார் பட்டீல் தெல்குர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்னுடன் நெருங்கி பழகினார். அவர் மூலம் எனக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை  தன் மூலம் தான் பிறந்தது என்று என்னிடம் ராஜ்குமார் பட்டீல் தெல்குர் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

மேலும் நான் உள்பட சிலர் அவரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். நான் அவரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டவில்லை. எனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை என்று அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

சிறைக்கு செல்லவும் தயார்

அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், ரூ.2 கோடி கேட்டு நான் மிரட்டியதாகவும் கூறி ராஜ்குமார் பட்டீல் தெல்குர், வீரபத்ரசாமி கோவிலில் சத்தியம் செய்தால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன். ராஜ்குமார் பட்டீல் தெல்குரின் ஆதரவாளர்கள் சிலர் என்னை மிரட்டினர். காங்கிரசார் சொல்லி கொடுத்து தான் ராஜ்குமார் பட்டீல் தெல்குர் மீது பொய் புகார் கொடுக்கிறாயா என்றும் என்னிடம் கேட்டனர்.

என்னை விசாரணைக்கு அழைத்து சென்று விதான சவுதா போலீசார் கொடுமைப்படுத்தினர். சரியான உணவு கூட தரவில்லை. நான் எனது குழந்தைக்கான உரிமையை தான் கேட்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story