வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் திடீர் பரபரப்பு
வாடிப்பட்டி பேரூராட்சி 9-வது வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி 9-வது வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.
வேட்பாளர் திடீர் மாயம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9-வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியும், அ.தி.மு.க. சார்பாக இந்திராணி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வார்டில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராணி திடீரென மாயமானார். அவரை தி.மு.க.வினர் கடத்திச் சென்றதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறினர். மேலும் அவரை கண்டுபிடித்து மீட்டுத்தரக் கோரி அ.தி.மு.க மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா சிலை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் பொறுப்பாளர் சோனை, முன்னாள் எம்.எல்.ஏ.,எம்.வி. கருப்பையா, கூட்டுறவு சங்க துணை தலைவர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மனுவை வாபஸ் பெற்றார்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் திடீர் திருப்பமாக மாயமானதாக கூறப்பட்ட இந்திராணி வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று பகல் 11 மணியளவில் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சரவணனை சந்தித்து தனது மனுவை வாபஸ் பெற்றார்.
கடத்தவில்லை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் எனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தி.மு.க.வினர் யாரும் என்னை கடத்தவில்லை. எங்கள் குலதெய்வ கோவிலுக்காக வெளியூருக்கு சென்று இருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி பஸ்நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story