அம்பை வாகைப்பதியில் தை திருவிழா தேரோட்டம்
அம்பை வாகைப்பதியில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அம்பை:
அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் தை திருவிழா கடந்த 28-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அய்யா வைகுண்டர் அனுமன், நாகம், பல்லக்கு, இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சி அளித்தார். தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு அன்னதர்மமும் நடைபெற்றது.
8-ம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் முந்திரி கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் எடுத்து ஊர்வலம் மற்றும் அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை செண்டை மேளம் முழங்க நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான அன்புகொடி மக்களும், வாகைபதி தொண்டர்களும், அய்யா வழி பக்தர்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story