சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
பெரம்பலூர்:
ஜல்லிக்கட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கடந்த மாதம் 17-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டை, கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து, ஒத்திவைத்தது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் சில்லக்குடியில் இந்த மாதம் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் முறையான அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகவும் இது அமைந்தது. ஜல்லிக்கட்டையொட்டி நேற்று முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அரசு டாக்டர்களை கொண்டு முறையான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் வரப்பெற்ற கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மத்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினரும், ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு கண்காணிப்பு அதிகாரியுமான மிட்டல் ஆகியோர் காலை 8.45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் கண்காணிப்பு அதிகாரி ஜல்லிக்கட்டை பார்வையிட்டு காளைகள் துன்புறுத்தப்படுகிறதா? என்பதனையும் கண்காணித்தார். வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக சீறிப்பாய்ந்து வந்தன. காளைகள் அவிழ்த்து விடப்பட்டபோது அவற்றின் உரிமையாளர்கள் பெயர், அந்த காளையை அடக்கினால் கிடைக்கும் பரிசு விவரம் ஒலிப்பெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் சில காளைகள் திமிறி எழுந்து யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப்பாய்ந்து சென்றது.
சப்-இன்ஸ்பெக்டர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 411 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 233 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.
காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. 8 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story