நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 177 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 9-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக், அ.தி.மு.க. சார்பில் பாலாஜி, பா.ம.க. சார்பில் குமார், சுயேச்சையாக பாலமுருகன், தி.மு.க.வின் மாற்று வேட்பாளராக கார்த்திக் மனைவி தேன்மொழி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த சனிக்கிழமை 5 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் போது தி.மு.க. மாற்று வேட்பாளர் தேன்மொழி தனது மனுவை வாபஸ் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் பாலாஜி மனுவும், சுயேச்சை வேட்பாளர் வேல்முருகன் மனுவும் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இறுதியாக 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக், பா.ம.க. வேட்பாளர் குமார் ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனையடுத்து பா.ம.க வேட்பாளர் குமார் திடீரென தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி 9-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்த எம்.கே.டி.கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை எம்.கே.தண்டபாணி 4 முறை நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story