புலி நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் பொருத்தம்
ஊட்டி அருகே புலி நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி அருகே புலி நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புலி நடமாட்டம்
ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட கடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் உள்ளது. விவசாய தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் புலியை நேரில் பார்த்து வீடியோ எடுத்தனர்.
காவிலோரை, மாவுக்கல் கிராமங்களில் இருந்து கடநாடுக்கு சென்று வரும் சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் பகல் நேரத்தில் புலி நடமாடி வருவதால் விவசாய தோட்டங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே புலியை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரி ஆய்வு
இந்தநிலையில் நீலகிரி வனக்கோட்ட அதிகாரி சச்சின், புலி நடமாட்டம் உள்ள இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் கிராம மக்கள் பகலில் புலி நடமாடுவதால் அன்றாட வேலைகளுக்கு செல்ல அச்சம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.
இதையடுத்து அவர் இங்கு வேறு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்று கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் மலை உச்சி வழியாக நடந்து சென்று புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
கேமராக்கள் பொருத்தம்
இந்த நிலையில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க காவிலோரை, மாவுக் கல், கடநாடு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக புலி நடமாடினால் கேமராவில் பதிவாகுமா என்று வனத்துறை யினர் ஒத்திகை செய்து பார்த்துவிட்டு அவற்றை பொருத்தினார்கள்.
இந்த கேமரா 10 மீட்டர் தூரம் வரை வனவிலங்குகளின் புகைப்படத்தை பதிவு செய்யும் திறன் பெற்றது. இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியாக செல்லக்கூடாது
கடநாடு உட்பட 3 கிராமங்களில் புலி நடமாட்டம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் புகைப்படங்கள் மூலம் புலியின் வயது போன்றவற்றை ஆராய்ந்து கண்காணிக்கப்படும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது. மேலும் பொதுமக்கள் தனியாக சென்று வருவதை தவிர்க்க வேண்டும். புலி நடமாட்டத்தை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது வனச்சரகர் கணேசன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story