பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்- ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜ், கோவிந்தராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் கூறியதாவது:-
அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையிலும், நேர்மையாகவும் நடைபெற போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தவொரு இடத்திலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையின்றி தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் அந்த மையங்களில் கூடுதலாக போலீசாரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக பதற்றம் நிறைந்த, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் எங்கும் நடைபெறாமல் தீவிர கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும். தேர்தல் முடிவடையும் வரை சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரச்சினை செய்யக்கூடும் என்று கருதுபவர்களையும், ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story