ரூ.27 லட்சம் நகைகள் பறிமுதல்
விழுப்புரத்தில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.27 லட்சம் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை 11.30 மணியளவில் விழுப்புரம் நகராட்சி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், போலீசார் பரமசிவம், ஷோபா ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பறக்கும் படை அதிகாரிகள், வழிமறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 74¾ பவுனுக்கு தங்க நகைகளான பெரிய கம்மல், சிறிய கம்மல் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முத்தமிழ் தெருவை சேர்ந்த பாலையா மகன் குமரன் (வயது 25) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அதிகாரிகளிடம் குமரன் கூறுகையில், நானும், எனது சகோதரர்கள், உறவினர்கள் சேர்ந்து நகை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், விழுப்புரம் நகரில் உள்ள நகை கடைகளில் இருந்து ஆர்டரின்பேரில் வரும் நகைகளை செய்து, அதனை அந்த கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். அதுபோல்தான் தற்போது எங்கள் வீட்டில் நகைகளை செய்து விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
74¾ பவுன்
இருப்பினும் அந்த நகைகளை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் ஏதும் குமரனிடம் இல்லாததால், அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேந்திரஷாவிடம் ஒப்படைத்தனர். 74¾ பவுன் எடையுள்ள இந்த நகைகளின் மதிப்பு ரூ.27 லட்சத்து 14 ஆயிரத்து 920 ஆகும். இந்த நகை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா என அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story