வஉசிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு நகரும் பஸ்சில் புகைப்பட கண்காட்சி கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


வஉசிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு நகரும் பஸ்சில் புகைப்பட கண்காட்சி கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Feb 2022 10:20 PM IST (Updated: 8 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வஉசிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி 
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் கடந்த 1872-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தவர். விடுதலைக்காக போராடிய தியாக செம்மல். ஒழுக்கம், வாய்மை, பிறர் நலம் பேணல் ஆகிய நற்குணங்களை பெற்று, அவற்றை வாழ்வின் குறிக்கோள்களாக கொண்டிருந்தார். ராமகிருஷ்ண மடத்துத் துறவிகளின் சந்திப்பு, ஆன்மிக தேடலை கடந்து அவரது பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.
3 நாட்கள்
அரசியலில் தனது குருவாக மதித்த திலகரின் கொள்கைகளை பின்பற்றினார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் வீழ்த்திட சுதேசி நேவிகேஷன் கம்பெனி என்ற கப்பல் கம்பெனியை தொடங்கி கப்பலோட்டிய தமிழன் என புகழ்பெற்றவர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை போற்றும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நகரும் பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்கள் செல்ல உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை பார்வையிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சதீஸ்குமார் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story