‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 11:41 PM IST (Updated: 8 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நத்தம் கிராமத்தில் ஏழூர்பட்டியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாகராஜசோழன், நத்தம், திருச்சி.
அதிக கட்டணம் வசூல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலிண்டரின் விலையை விட கூடுதலாக ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். குறிப்பாக சில்லரை இல்லை என்று ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயமாக வசூலிக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவன அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், புதுக்கோட்டை.
பழுதடைந்த சாலையால் அவதி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து ஆவணம் கைகாட்டி செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் மாங்காட்டை அடுத்து அனவயல் செல்லும் சாலையின் நடுவே உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீனதயாளன், புதுக்கோட்டை.
பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் இதன் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நளினி, புதுக்கோட்டை.

Next Story